Tuesday 24 January 2017

வலுவாடி (புள்ளித்திருக்கை) (Spotted Eagle Ray)

திருக்கைகளில், ஆனைத் திருக்கைக்கு (Manta ray) அடுத்தபடி பெரிய உருவம் கொண்ட திருக்கை வலுவாடி எனப்படும் புள்ளித்திருக்கைதான். திருக்கைகளில் கண்ணுக்கு மிகவும் இன்பமூட்டும் திருக்கையும் இதுதான். வலுவாடி அதன் வாலையும் 16 அடி நீளம் இருக்கலாம். இதன் பறவை போன்ற சிறகுகளின் அகலம் மட்டும் பத்தடி வரை இருந்தால் வியப்ப தற்கில்லை. 230 கிலோ வரை நிறை கொண்ட பெரிய திருக்கை இது. வலுவாடியின் மேலுடல் பசுமஞ்சள் நிறமாகவோ, கருநீலநிற சாயலாகவோ கூட இருக்கலாம். அதில் வெள்ளைநிற புள்ளிகள் அழகுமிளிர காணப்படும். வலுவாடியின் அடிப்பகுதி வெண்ணிறமானது. திருக்கைகளில் மிக நீளமான வால் கொண்ட திருக்கைகளில் வலுவாடியும் ஒன்று. இதன் கரிய நிற வால், 1.2 மீட்டர் முதல் 2 மீட்டர் நீளத்துடன் திகழும்.இந்த நீள வாலில் 2 முதல் 6 நச்சு முள்கள் காணப்படலாம்.
வலுவாடியின் தாடை வட்டமானது, அலகு பறவை போல கூர்மையானது. இந்த அலகின் மூலம் இரைமீன்களின் வாசனை, மின்னலைகளை வலுவாடியில் உணர்ந்து இரைதேட முடியும்.
உருவில் பெரிதாக இருந்தாலும் வலுவாடி திருக்கைக்கு ஆனைத் திருக்கையைப் போலவே அடக்கமான குணம். தனித்துத் திரியும் பழக்கமும், கூச்சமும் கொண்ட வலுவாடி திருக்கை, மனிதர்களின் அண்மையை வெறுக்காது. கடலில் முக்குளிப்பவர்களிடம் இது நெருங்கி வரக்கூடியது. பொதுவாக ஆபத்தற்றது.
வலுவாடி சுறுசுறுப்பாக எப்போதும் நீந்தக்கூடியது. திருக்கை இனத்தின் மற்ற உறுப்பினர்களைப் போல மணலில் புதையாமல், பெருங்கடல் எங்கும் நீந்தித் திரியும் திருக்கை இது
வலுவாடி சுறுசுறுப்பாக எப்போதும் நீந்தக்கூடியது. சிறகுகளை அசைத்து கடலடியில் ஒரு பறவையைப்போல இது பறக்கும் அழகே தனி.

கடலடியில் மற்ற சாட்டை வால் திருக்கைகளைப் போல இது ஓரிடத்தில் தரித்து நிற்காது. நாள் முழுவதும் கடலடி மண்டியைக் கிளறி இது இரை தேடியபடி இருக்கும்.மீன், நண்டு, சிப்பி உள்பட பலவகை இரைகளை வலுவாடி உண்ணக்கூடியது. இதன் வலுவான தாடைகளால் சிப்பி போன்றவற்றை எளிதாக உடைக்க முடியும்.
தனித்து திரியும் பழக்கம் உள்ள வலுவாடி திருக்கை, இனப்பெருக்கக் காலத்தில் பெருந்திரளாகக் கூடும். கடலின் மேல்மட்டத்துக்கு வந்து நீரின் மேல் இரைந்து விழும் பழக்கமும் வலுவாடித் திருக்கைக்கு உண்டு. சிலவேளைகளில் இது கடல்நீர்ப்பரப்பை விட்டு துள்ளி, சற்றுபறக்கவும்செய்யும்.
கடலின் 6 முதல் 80 மீட்டர் ஆழத்தில் வலுவாடி காணப்படும். 1 முதல் 4 வரை உயிருள்ள குட்டிகளை பெண்திருக்கை ஈனும். வலுவாடியின் இயற்கையான எதிரி சுறாக்கள்தான்.
சுறாக்களால் வேட்டையாடப்படும் ஆபத்து வலுவாடிக்கு உண்டு.

பார்கள் எனப்படும் பவழப்பாறைகளுடன் தொடர்புள்ள வலுவாடித் திருக்கைக்குத் தொலைகடல்களுக்கு வலசை போகும் பழக்கமும் உண்டு.
அழுங்காமை (Hawks bill turtle)

அழுங்காமைக்கு ஏகப்பட்ட பேர்கள். பருந்தலகு ஆமை, எலிமூஞ்சி ஆமை, ஆமையோட்டு ஆமை (Tortoise shell Turtle)… இப்படிப் பல பெயர்களில் அழுங்காமை அழைக்கப்படுகிறது.
கடலின் அடியாழத்தை கவனமாக தவிர்க்கும் ஆமை இது. பொதுவாக வெப்பக்கடல்களில் பவழப்பார்களை அண்டியே இது வாழும். ஆழக் கடல்களை அழுங்காமை விரும்பாது.
மற்ற கடல்ஆமைகளுடன் ஒப்பிடும்போது அழுங்காமை பெரிய உரு கொண்ட ஆமை அல்ல.

இரண்டரை அடி வரை அழுங்காமை வளரலாம். ஒரு மீட்டர் நீளமான ஆமையும் உண்டு. நிறை 45 முதல் 75 கிலோ.
அழுங்காமையின் பல வண்ண ஓடு மிகமிக அழகானது. விலைமதிப்பற்றது.
இளம் ஆமையின் ஓடு இதய வடிவில் காணப்படும். வளர்ந்தபின் ஓடு நீட்டமாகும். பெண் ஆமையை விட ஆண் ஆமையின் ஓடே மிகவும் வண்ணம் செறிந்து திகழும்.
ஓட்டின் பின்புறத்தில் மெல்லிய பலநிற செதிள்கள் காணப்படும். மாம்பழத்தோல் போல, இதன் ஓட்டின் தோல் உரிந்துவரக் கூடியது.
இதன் கனத்த தடித்த தோடு எதிரிகளிடம் இருந்து அழுங்காமையைக் காப்பாற்றினாலும் சுறா, கணவாய் போன்றவற்றுக்கு அழுங்காமை அவ்வப்போது இரையாகக் கூடியது.
அழுங்காமையின் முதன்மை அடையாளமே அதன் அழகிய பலவண்ண ஓடும், பறவை மூக்கும்தான்.
அழுங்காமைக்கு பறவை மூக்கு போல கூரிய சொண்டு (அலகு) உண்டு. பருந்தலகு ஆமை என்று இது அழைக்கப்பட இதுவே காரணம். கால் துடுப்பு ஒவ்வொன்றிலும் அழுங்காமைக்கு இரண்டிரண்டு நகங்கள் இருக்கும். இதில் ஆண் ஆமைகளின் உகிர்கள் (நகங்கள்) பெண்ணைக் காட்டிலும் சற்று நீளமானவை.
அழுங்காமை ஓர் அனைத்துண்ணி. பார்களைச் சுற்றித்திரியும் இது கடல்பாசி, கடல் சாமந்தி, மூரை, சொறிமீன், சிறிய மீன்களை உணவாக்க கூடியது. ஆயினும், அழுங்காமையின் முதன்மை இரை, பார்களில் காணப்படும் கடற்பஞ்சு உயிரினம்தான்.
குறுகிய மூக்கால் பார்களின் இண்டு இடுக்குகளில் இது கடற்பஞ்சுகள், கடல் நத்தைகளைத் தேடித் தேடி இரையாக்கும். கடற்பஞ்சுகள் நச்சுத் தன்மை உள்ளவை. கண்ணாடி போன்ற முட்கள் கொண்டவை. அழுங்காமை உண்ணும் கடற்பஞ்சுகளின் நஞ்சு அனைத்தும் அழுங்காமையின் உடலில் சேமித்து வைக்கப்படும். இந்த நஞ்சு அழுங்காமையை ஒன்றும் செய்யாது.
ஆனால், அழுங்காமையைத் தின்பவர்களின் கதி அதோகதி.


Monday 2 January 2017

கட்டைச்சுறா (Black tip reef Shark)

கடலின் மிக மூத்த குடிகள் என்றால் அது சுறாக்கள்தான். ஏறத்தாழ 410 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்தோன்றிய மூத்தகுடி சுறா. (திமிங்கிலம் தோன்றியது வெறும் 55 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்புதான்) வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி என்பது போல, கடந்த பல மில்லியன் ஆண்டுகளில் ஏராளமான சுறா இனங்கள் தோன்றி அழிந்திருக்கின்றன.
இன்றைய நம் உலகில் 440 முதல் 450க்கும் மேற்பட்ட சுறா இனங்கள் உள்ளன.
சுறாக்களில் ஒருவகை சிறிய சுறா கட்டைச்சுறா அல்லது கட்டசுறா. பார்வைக்கு இது மிகவும் அழகான சுறாவும் கூட. 6 அடி நீளம் கொண்ட கட்டைச்சுறா சிறியது ஆனால் மின்னல்போல வேகம் மிக்கது. இதன் நிறை வெறும் 20 முதல் 25 கிலோதான்.
பவழப்பாறைகள், மணற்பாங்கான ஆழம் குறைந்த கடல்களில் சிறு கூட்டமாக கட்டைச்சுறா சுற்றித்திரியும்.
கடலில் முக்குளிப்பவர்கள் அடிக்கடி காணக்கூடிய சுறா இது. சிறிய சுறா என்பதால் இது ஆபத்தற்ற சுறா. கடல்நீர் கலங்கியிருக்கும் வேளையில் சீண்டியபோது மட்டுமே கட்டைச்சுறா மனிதர்களைத் தாக்கியிருக்கிறது. மற்றபடி இது மனிதர்களின் அண்மையை வெறுத்து, ஒதுங்கிச் செல்லக் கூடிய சுறா.
கட்டைச்சுறாவை பயமுறுத்துவது எளிது. பயப்படும்போது இந்த சுறா S வடிவில் நெளியும்.
கட்டைச்சுறாவின் அனைத்து தூவிகளின் முனைகளிலும் சிறு கறுப்புத்திட்டு காணப்படும். குறிப்பாக முதுகுத்தூவியில் இந்த கறுப்புத்திட்டு ஒரு முக்கோணம் போல அழகுபட துலங்கும். கட்டைச்சுறாவின் முக்கிய அடையாளமே இதுதான்.
உடலின் அளவு மற்றும் மொண்ணையான மூக்கு காரணமாக கட்டைச்சுறா என்ற பெயர் இதற்கு ஆகி வந்திருக்கிறது.
கட்டைச்சுறா ஓரடி ஆழமுள்ள கடற்கரைப்பகுதிக்கு கூட வந்து செல்லும். அப்படி வரும் போது இதன் முதுகுத்தூவி கடல்மட்டத்துக்கு மேல் தெரிந்து பயமுறுத்தும். சின்னஞ்சிறு பார்மீன்களே கட்டைச்சுறாவின் முதன்மை உணவுஇரைமீன்களை வேட்டையாடும்போது தன்னின சுறாவுடன் இணைந்து இது கூட்டாகச் செயல்படும். ஓங்கல்களைப் போலவே மீன்கூட்டத்தை ஒரு பந்தாகத் திரட்டி கட்டைச் சுறாக்கள் விருந்துண்ணும். கணவாய், இறால்களையும் இது தின்னும்.
கடல்நீரை விட்டு முழுவதுமாக வெளியே துள்ளிக்குதிக்கும் ஒருசில சுறாக்களில் கட்டைச்சுறாவும் ஒன்று. இரைமீன்கூட்டத்தை உளவு பார்க்க கட்டைச்சுறா இப்படி கடல்மேல் துள்ளும். இதை ஒற்றன் துள்ளல் (SPY HOPPING) என்பார்கள். கட்டைச்சுறாவின் கர்ப்பக் காலம் 16 மாதங்கள். 2 முதல் 4 குட்டிகளை இது ஈனும்.
கட்டைச்சுறா பவழப்பாறைகளையும் ஆழம்குறைந்த கடல்பகுதிகளிலுமே அதிகம் சுற்றித்திரியும் சுறா. கட்டைச்சுறாவைப் போலவே தூவிகளில் கருந்திட்டு உள்ள மற்றொரு சுறாவும் இருக்கிறது. அது குண்டன் சுறா. சாம்பல் அல்லது கருநீல நிறமான இந்த சுறாவின் பின்புற அடித்தூவியைத் தவிர்த்து மற்ற தூவிகள் அனைத்திலும் கருந்திட்டு காணப்படும். முகம் வட்டமாக சற்று நீண்டுகாணப்படும். இதன் முதுகு முன்புறதூவி அரிவாள் போன்றது. பின்புற முதுகுத்தூவி சிறியது. இரு தூவிகளும் இணைப்பு எதுவுமின்றி தனித்தனியாக காணப்படும். குண்டன் சுறாவின் நிறம் சாம்பல் முதல் பழுப்பு. எளிதாகக் காணக்கூடிய வகையில் இதன் உடலின் இரு பக்கங்களிலும் வெண்வரிகள் தென்படும்.
262 அடி ஆழ கடலில் குண்டன்சுறா காணப்படும். திருக்கை, கணவாய் போன்றவை இதன் முதன்மை உணவுகள். கட்டைச்சுறா போலில்லாமல், குண்டன் சுறா பெரும்பாலும் தனிமை விரும்பி.

இரை உண்ணும் போது இது கண்களை தலைக்குள் உருட்டிக் கொள்ளும். கரையோரம் வந்து மனிதர்களைத் தாக்கும் பழக்கமும் குண்டன் சுறாவுக்கு உண்டு. 
நீங்கள் கடலில் முக்குளிப்பவராக இருந்தால் கட்டைச்சுறாவுக்கும், குண்டன் சுறாவுக்கும் உள்ள வித்தியாசத்தைப் புரிந்து கொள்வது நல்லது. மாறாக குண்டன் சுறாவை கட்டைச்சுறா எனத் தவறான புரிதல் ஏற்பட்டால் அது ஆபத்துக்கு வழிவகுக்கும்.
(குறிப்பு: படத்தில் உள்ள இருசுறாக்களும் கட்டைச்சுறாக்களே)