Tuesday 28 November 2017

கெழுது (Cat Fish)

உலக அளவில் கடலிலும் நன்னீர் நிலைகளிலும் வாழும் மிகப்பெரிய மீன் குடும்பம் கெழுது மீன் குடும்பம்தான். கெளிறு, கெழுத்தி, கெழுது என்றெல்லாம் பலவாறாக இந்த மீன் இனம் அழைக்கப்படுகிறது.
உலகம் முழுவதும் கெழுதில் எத்தனை வகை இருக்கிறது என்று கேட்டால் உயிரியல் அறிஞர்களே கூட முழிபிதுங்கி போவார்கள். அந்த அளவுக்கு 2,200 முதல் 4 ஆயிரத்து 500 வகை கெழுது இனங்கள் உலகம் முழுவதும் இருப்பதாக நம்பப்படுகிறது.
அதுபோல கெழுதில் மொத்தம் எத்தனை குடும்பங்கள் என்பதிலும் குழப்பம்தான். சிலர் 15 முதல் 25 குடும்பங்கள் என்பார்கள். சிலர் 35 குடும்பங்கள் என்பார்கள்.
கெழுது இன மீன்கள் கடல் மட்டுமின்றி உள்நாட்டு நீர்நிலைகள், ஆறுகள், குளங்கள், சிற்றோடைகளிலும் காணப்படும். உலக நீர்நிலைகள் பலவற்றிலும் நீக்கமற நிறைந்திருக்கும் ஒரு மீன் இனம் கெழுது.
கெழுது இன மீன்களின் முதன்மை அங்க அடையாளம் அவற்றின்மீசைதான். (Barbel) இந்த மீசைகள் ஓர் இணையாக (Single pair) இருக்கலாம் அல்லது பல மீசைகளாகவும் இருக்கலாம்.
எடுத்துக்காட்டாக மாம்பழ கெழுது (SoldierCatfish). இதற்கு ஓர் இணை மீசை மட்டுமே உண்டு.
கெழுதுமீனின் மீசைகளில் சுவை மொட்டுகள் நிறைந்திருக்கும். இந்த மீசையின் மூலம் ஒரு பொருளைத் தொடாமலேயே அதன் சுவையை கெழுது மீனால் அறியமுடியும். இந்த மீசையின் உதவியுடன் மோப்பம் பிடித்து இரை தேடவும் கெழுது மீனால் இயலும். அதுமட்டுமல்ல, நீரில் கலந்துள்ள வேதிப்பொருள்களை இனம் காணவும் முடியும்.
ஆங்கிலத்தில், கெழுதுமீன் ‘பூனை மீன் எனவும் மீசை மீன் எனவும் அழைக்கப்பட இந்த மீசையே முதன்மை காரணம். கெழுது மீனின் இந்த மீசை, அதன் பக்க தூவியைத் தொட்டும் விடும் அளவுக்கு நீளமானது.
கெழுது மீனின் மற்ற அங்க அடையாளங்களாக தட்டையான அதன் தலை, பெரிய வாய், சிறிய கண்கள், கவட்டை வால் மற்றும் முட்களைக் கூறலாம்.
கெழுது மீனின் முதுகுத் தூவியிலும், இரு பக்கத்தூவிகளிலும் முட்கள் காணப்படும். நஞ்சற்ற இந்த மூன்று முட்கள் கடும் வலியை ஏற்படுத்தக்கூடியவை. இவற்றால் ஏற்படும் காயம் ஆற நீண்டநாளாகும்.
கெழுதுகளில் மீசை இல்லாத கெழுது இனங்களும் உள்ளன. அதுபோல முள்ளற்ற கெழுது இனங்களும் இருக்கின்றன.
கெழுதுகள் நீர்ப்பரப்பின் அடியில் தங்கி வாழும் மீன்கள். அங்குள்ள உயிருள்ள இரைகளையும், இறந்தவற்றையும் கெழுது உண்ணும். பூனையைப் போலவே கெழுது மீனும் ஒரு கொன்றுண்ணி (Predator). ஆழம் குறைந்த ஆற்றங்கரை ஓரம், தாகம் தணிக்கவும், நீராடவும் வரும் புறாக்களை கெழுதுமீன் வேட்டையாடும் அழகைப் பார்த்தால் பூனை மீன் என்ற பெயர் அதற்கு ஏன் வந்தது என்பது தெளிவாகப் புரியும்.
நாம் முன்பே கூறியது போல கெழுதில் பலவகைகள். அதில் மிகப்பெரிய கடல் கெழுதுகள், தேடு என அழைக்கப்படும்.
மண்டைக் கெழுது, மடிக் கெழுது, மாம்பழக் கெழுது (மஞ்சள் கெழுது), கட்டக் கெழுது, காயல் கெழுது, முழங் கெழுது, பொன் கெழுது (கட்டுவா கெழுது), ஊசிக் கெழுது, சல்லிக் கெழுது, மொண்டை கெழுது, முள்ளங் கெழுது, பொதி கெழுது, வெண் கெழுது, கூவங் கெழுது, கறுப்புக் கெழுது, சலப்பைக் கெழுது, பொரி கெழுது, கலி கெழுது, இருங் கெழுது, வரிக் கெழுது, பீக் கெழுது, கருத்த கெழுது, நொறுவாய் கெழுது, சுங்கான் கெழுது, வண்ணக் கெழுது, முட்டைக் கெழுது, அங்காள் கெழுது, ஆணிக்கெழுது, செம்பாணி கெழுது போன்றவை கெழுது வகைகளி சில. செம்பாணி கெழுதுக்கு செம்பு ஆணி போன்ற மஞ்சள்நிற முள் இருக்கும்.
செங்கனி என்பதும் கெழுது இனத்தில் ஒருவகை என்று கருதுகிறேன். சுங்கான், தேளி மீன்களும் கூட ஒருவகையான கெழுது மீன்களே.
கெழுதுகளில் மிகப்பெரியவை 9 அடி நீளமும், 50 கிலோ வரை எடையும் இருக்கலாம். சென்டி மீட்டர் அளவே உள்ள மிகச்சிறிய கெழுதுமீனும் உண்டு.
இரை கொன்று உயிர் வாழும் வேட்டை மீனான கெழுதுகளில் மிகச்சிறிய வகை கெழுது இனங்கள், கடலுயிர்க் கண்காட்சியகங்களில் துப்புரவுத் தொழிலாளர்களாக பணியாற்றுவதும் உண்டு.
கெழுது மீன்களுக்கு செதிள்கள் கிடையாது. அதனால், யூதர்கள், ஷியா இஸ்லாமியர்கள் கெழுது மீனை உண்ண மாட்டார்கள். உண்ணத்தகுந்த மீனாக கெழுது சிலரால் கருதப்படுவதில்லை. அதனால், வலையில் கெழுது சிக்கினால் சில நாட்டு மீனவர்கள் அதை மீண்டும் கடலில் தூக்கி எறிந்து விடுவார்கள்.
கெழுது இனங்களுக்கு செதிள் கிடையாது என்றாலும் சிலவகை கெழுதுகளுக்கு கனத்த செதிள்தோடுகள் உடலை மூடியிருக்கும். சிலவகை கெழுதுகளின் உடலை மாங்கு (Mucus) மூடியிருக்கும்.
கெழுது மீன்கள் பொதுவாக இரவாடி மீன்கள். அதாவது இரவில் நடமாடக்கூடிய மீன்கள். கனத்த பெரிய தலை, கெழுதுமீனை நீர்ப்பரப்பில் நீந்த வைப்பதைவிட நீரடியில் அமிழ்த்தவே உதவுகிறது.
கெழுது மீனுக்கு பள்ளை என்ற காற்றுப்பை உண்டு. இதன்மூலம் உயிர்க்காற்று குறைவான நீர்ப்பரப்பிலும் கெழுது மீனால் வாழ முடியும். தண்ணீருக்கு வெளியே, ஈரமாக இருக்கும்பட்சத்தில் கெழுது மீனால் குறிப்பிட்ட நேரம் வரை நீரின்றி உயிரோடு இருக்க முடியும். இதன் காற்றுப்பை கூடுதல் நுரையீரலாகப் பயன்படுகிறது.
கெழுதுமீன், இரையைக் கடித்து துண்டித்து விழுங்காமல், உறிஞ்சி விழுங்கும். அதுபோல வாயை முன்பக்கமாக துருத்த அல்லது பிதுக்க (முன்நீட்ட) கெழுது மீனால் முடியாது.

கெழுது இனத்தில் ஆண்மீன்கள், பெண் தரும் பட்டாணி அளவுள்ள ஏறத்தாழ 50 முட்டைகளை வாயில் வைத்து அடைகாக்கும். முட்டைகள் பொரித்து குஞ்சுகள் வெளிவந்தபிறகும் தந்தை கெழுதின் அன்பு 6 முதல் 8 வாரங்களுக்குத் தொடரும். குஞ்சுகளுக்கு ஆபத்து நேரும் போது, சிறகுகளை விரித்து குஞ்சுகளை வரவேற்கும் தாய்க்கோழி போல, தந்தை கெழுது அதன் வாய்க்குள் குஞ்சுகளுக்கு தஞ்சம் தரும். குஞ்சுகள் சற்று வளர்ந்து பெரிதாகும் வரை ஆண் கெழுதின் வாய், குஞ்சுகளுக்கு இப்படி ஆபத்து கால புகலிடமாகும். இந்த காலகட்டங்களில் ஆண்கெழுது இரை எதுவும் தின்னாமல் பசியால் வாடும். குஞ்சுகள் உரிய காலம்வந்து பெரியதாகி அகன்றதும், தந்தை கெழுது அகோரப் பசியுடன் இரைதேடும். அதன்பிறகு தந்தையின் அன்புக்காக ஏங்கி அருகே குஞ்சுகள் வந்தால் அவையும் தந்தை கெழுதின் பசிக்கு இரையாக நேரிடும்.