Thursday 15 March 2018


மடவை, மடவா (Mullet)

முகிலிடை உதித்த முழுநிலா என்பார்களே. அதைப்போல, Mugilidae குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மீன் மடவை.
பல்லாயிரம் ஆண்டு தமிழர் வரலாற்றோடு ஒட்டி உறவாடும் ஒரு மீன் இனம் இது. கயல், கெண்டை என்ற பெயர்களோடு பாண்டியரின் கொடியில் இடம்பெற்ற பெருமைக்குரிய மீனும் இதுதான். மங்கையரின் விழிகளை மீன்களுக்கு ஒப்பிடுவார்களே. அப்படி கயல்விழி என அழைக்கப்பட காரணமான மீனும் மடவைதான். இன்னும் சொல்லப்போனால் தமிழில் மீன் என்ற சொல் மடவையைத்தான் குறிக்கிறது. (மீன் என்ற பெயர் மின்னுவதால் வந்த பெயர்)
ரோமானியர்கள் காலத்தில், நடுநிலக்கடல் (மத்தியத்தரைக்கடல்) பகுதியில் பெரிய அளவில் ஓர் உணவு ஆதாரமாகத் திகழ்ந்த பெருமையும் மடவைக்கு உண்டு.
மடவை சதைப்பற்றுள்ள, வேகமாக நீந்தக்கூடிய பெரும்கூட்ட மீன் (School Fish).உடலின் இருபுறமும் வெள்ளி கலந்த நிறத்துடன், முதுகில் பச்சை நிறமாகவும் மடவை மிளிரும். நீலம் கலந்த சாம்பல் நிற மடவையும் உண்டு. மடவையின் அடிவயிறு மற்ற மீன்களுக்கு இருப்பதைப் போலவே பால் வெள்ளை நிறம்.
மடவை திண்மையான நீள்சதுர வடிவ உடல் கொண்டது.
மடவையின் முதுகில் இரு தனித்தனி தூவிகள் இலங்கும். முதல் முதுகுத் தூவியில் விறைப்பான 4 முட்கள் இருப்பது இந்த மீனின் தனி அடையாளம். தட்டையான தலை, வட்ட செதிள்கள், மழுங்கலான மூக்கு, கவை வால், சிறிய முக்கோண வடிவ வாய் போன்றவை பிற அடையாளங்கள்.
மடவை மீனின் தாடையில் வலுவற்ற சிறிய பற்கள் இருக்கும். சிலவகை மடவைகளுக்கு பற்களே கிடையாது. மடவைகளில் நூறுக்கும் சற்று குறைவான வகைகள் உள்ளன.
மடவைகள் ஓரடி நீளம் முதல் 3 அடி நீளம் வரை வளரக்கூடியவை.
மடவை பொதுவாக சைவம். பாசிகள், சிறிய கடலுயிர்கள் இதன் உணவு. மண்டியைக் கிளறி இது இரை தேடும். மடவை மீனுக்கு பறவைகளுக்கு இருப்பது போல குடலில் ரைவைப் பை உண்டு. அதன்மூலம் உணவை இது அரைக்கக் கூடியது. செரிக்காத உணவை வெளியே துப்பும் பழக்கமும் மடவைக்கு உண்டு.
மடவை அடிக்கடி துள்ளிக்குதிக்கும் மீன். கடல்மேல் மூன்றடி உயரத்துக்கு இது துள்ளிவிழும். உடலை விறைப்பாக வைத்து பொத் என்ற சத்தம் எழ இது கடலில் விழும். மடவை துள்ளுவதை வைத்து அதன் கூட்டம் இருக்கும் இடத்தை கடலில் எளிதாக கண்டுகொள்ளலாம்.
மடவை ஏன் துள்ளுகிறது என்பதற்கு 4 வகை காரணங்களைச் சொல்கிறார்கள்.
1.கொல்மீன்கள் துரத்துவதால் இது துள்ளிப் பாய்கிறது. 2. உடலில் உள்ள ஒட்டுண்ணிகளை கழற்றிவிட மடவை துள்ளுகிறது. 3. அதிக உயிர்க்காற்றைத் தேடி மடவை துள்ளி விழுகிறது. 4. முட்டையீனும் காலத்தில் முட்டைப் பையைத் திறக்க மடவை துள்ளுகிறது. இவையே அந்த 4 காரணங்கள்.
மடவை (Mullet) மீன்கள் உண்ண சுவையான மீன்கள். வெண்ணிற மடவை, பாலை மீனுடன் (Milk Fish) நெருங்கிய தொடர்புள்ள மீன்.

2 comments :

  1. கெண்டை மீன் ஆற்றுநீரில் தான் பார்த்துள்ளேன், என் ஊர் பரமக்குடியில் வைகையில் நீர் ஓடும் போது, தேங்கியுள்ள நீரில் தூண்டிலில் கெண்டை, கெழுத்தி போன்ற மீன்களே பெரும்பாலும் சிக்கும். அந்த கெண்டையில் வாலில் நடுவில் ஒரு கருப்பு மச்சம் இருக்கும். வெயில் படும்போது வெள்ளி போல மின்னும். கடல் மீனில் கெண்டை பற்றி இப்போது தான் கேள்விப்படுகிறேன்.

    ReplyDelete
  2. உங்கள் பதிவிற்கு நன்றி , நான் இந்த வகை மீனை ஒரு சுனை குட்டையில் பார்த்திருக்கிறேன் அனால் அதன் நீளம் 3~8செ.மீ அளவுதான் , சிறிய அளவில் பெரும்கூட்டமாக தென்பட்டது

    மடவா மீன் நன்னீரில் வளருமா ?

    ReplyDelete